இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் பற்றி

பாரதத்தாயின் குழந்தைகளான நமக்குள் சென்ற ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 15, 2001) மலர்ந்த இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவினை உங்களுடன் இந்த "ஆண்டுமலர்" மூலம் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

ஒரு முட்டைக்குள் உறங்கும் கோழிக்குஞ்சு வெளியில் வருவதற்கான வெப்பத்தை வேண்டுமானால் தாய் தரலாம். ஆனால், ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வர வேண்டும் என்கிற விருப்பத்தை யார் தரமுடியும்? குஞ்சுக்கு அந்த ஆர்வமும் ஆசையும் தானாக இருந்தால் தான், அது வெளியில் வர முடியும். அந்த உத்வேகம் உயிரின் இயற்கை குணம். உலகில் இயக்கத்துக்கான மூல வேர்.

இந்த உத்வேகம். உற்சாகம் உள்ளவர்கள் தான் உலகை உருவாக்குகிறார்கள். இயல்பாக நம்முள் புதைந்திருக்கும் அந்த ஆற்றலை, மகா சக்தியை நாம் அடையாளம் கண்டு கொண்டால் ஜெயிக்கலாம், ஜெயித்துக் கொண்டே இருக்கலாம். "உலக வரலாறு என்பது, உள்ளபடி ஒருசில தனி மனிதர்களின் வரலாறுதான். ஆனால், அந்தத் தனிமனிதர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். இயல்பாகவே நமது இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையும் உத்வேகமும் இருக்கிறது. அகிம்சாவாதத்தால் நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி முதல், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அறிவியல் வளர்ச்சி மூலம் பாதுகாப்பு அரணை ஏற்படுத்திய அப்துல் கலாம் வரை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்ற ஆணி வேரிலிருந்து தான் சாதித்து இருக்கிறார்கள்.

 

Copyright © 2025 ILAYA BHARATHAM ILAIGNAR NARPANI MANDRAM